Practical Health Psychology

Translating research to practice, one blog post at a time

Practical Health Psychology
அதிக ஆபத்து கொண்ட குழுக்களில் COVID-19 நோயறிதல் மற்றும் சிகிச்சையை ஆதரிக்க நடத்தை அறிவியலை பயன்படுத்துதல்

அதிக ஆபத்து கொண்ட குழுக்களில் COVID-19 நோயறிதல் மற்றும் சிகிச்சையை ஆதரிக்க நடத்தை அறிவியலை பயன்படுத்துதல்

பங்களிப்பாளர்கள்: ட்ரேசி எப்டன், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், இங்கிலாந்து, லிசா மேரி வார்னர், MSB மருத்துவப் பள்ளி பெர்லின், ஜெர்மனி, அலெக்ஸாண்ட்ரா லாசிக், சுயாதீன ஆய்வாளர், பெல்கிரேட், செர்பியா

COVID-19 தொடர்பாக அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளுடன் பணிபுரிவது, ஒரே நேரத்தில் பல உரையாடல்களை கையாள்வதைப் போன்றதாக உணரப்படலாம். நிச்சயமாக, நாம் பகிர வேண்டிய மருத்துவத் தகவல்கள் உள்ளன. ஆனால் அதோடு சேர்ந்து, நோயாளிகள் தங்களுடைய கலாச்சாரத்தால் வடிவமைக்கப்பட்ட நம்பிக்கைகள், சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய அனுபவங்கள், சமூக அவமதிப்பு குறித்த அச்சங்கள் ( fear of social stigma), சமூக வலைப்பின்னல்களிலிருந்து கிடைக்கும் முரண்பட்ட தகவல்கள், மற்றும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் போன்ற பல அம்சங்களையும் தங்களுடன் கொண்டு வருகின்றார்கள். நடத்தை அறிவியல், இந்த சிக்கலான அம்சங்களைப் புரிந்துகொண்டு அவற்றை தெளிவுபடுத்த உதவுவதுடன், முழு செயல்முறையையும் மேலும் எளிமையானதாகவும், மனிதநேயமிக்கதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற உதவக்கூடும்.

சவால்களில் ஒன்று நோயறிதல்( diagnosis) தெரிவிக்கப்படும் அந்த ஆரம்ப தருணத்திலேயே தொடங்குகிறது. குறிப்பாக நேர அழுத்தம் அதிகமாக இருக்கும் போது அல்லது நோயாளர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்பது குறித்து உறுதியில்லாதபோது, பல மருத்துவர்கள் நுணுக்கமான தகவல்களை பகிர்வதில் கவலைப்படுகிறார்கள். அதேவேளை, நோயாளிகள் தவறான தகவல்களை நம்பியிருக்கக்கூடும் (“பரிசோதனைகள் துல்லியமானவை அல்ல”, “COVID இப்போது ஆபத்தானதல்ல” போன்றவை), அல்லது முந்தைய அனுபவங்களின் காரணமாக சுகாதார அமைப்பின் மீது எச்சரிக்கையுடனோ நம்பிக்கையின்மையுடனோ இருக்கக்கூடும். சிலர், இந்த நோயறிதல் தங்கள் வேலை, குடும்பம், அல்லது சமூகத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்துடனும் இருக்கலாம்.

இந்த உரையாடலுக்குள் நாம் நுழையும் போது, அது வெறும் மருத்துவச் சூழல் மட்டுமல்ல, மிகவும் மனிதநேயமான ஒரு இடத்திற்குள் நுழைவதையும் குறிக்கிறது. பலருக்கு தங்களின் உடல்நலம் குறித்து பேசுவது சிரமமாக இருக்கலாம் — அவர்கள் தங்களை யாரோ மதிப்பிடுகிறார்கள் என்று உணரக்கூடும், வெட்கப்படக்கூடும், அல்லது தாங்கள் தவறான உடல்நலத் தேர்வுகளைச் செய்கிறோம் என்று கவலைப்படக்கூடும்.

இவ்வாறு உணரும்போது, அவர்கள் தற்காப்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ளலாம். உதாரணமாக, சிகிச்சையின் தேவையை மறுக்கலாம், COVID-19 இன் கடுமையை குறைத்து மதிப்பிடலாம், அல்லது சிகிச்சை பயனற்றது என்று நம்பலாம். நோயறிதலுக்கான பாதுகாப்பான சூழலை ( safe space for diagnosis) உருவாக்குவது, தவறான தகவல்களைச் சரிசெய்வது, மற்றும் தற்காப்பு மனப்போக்கை (defensiveness) குறைப்பது எப்படி என்பதை அறிய, பரிந்துரைகளில் உள்ள, படி 1 ஐ பார்க்கவும்.

நோயறிதல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அடுத்த முக்கிய சவால் நோயாளியின் உந்துதல் (motivation) ஆகும். வெறும் ஆபத்து தகவல்களை மட்டும் வழங்குவதால் உந்துதல் உருவாகாது. குறிப்பாக லேசான உடல்நலக் குறைபாடுகளுடன் இருப்பவர்கள் அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாத அதிக ஆபத்து கொண்ட நோயாளிகள், ஏன் அவசர சிகிச்சை அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள சிரமப்படக்கூடும்.

மற்றவர்கள், வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள் பயனளிக்குமா என்ற சந்தேகத்திலோ அல்லது அதன் பக்கவிளைவுகள் குறித்து கவலையிலோ இருக்கக்கூடும். சிலர் தங்களை “அதிக ஆபத்து கொண்டவர்கள்” என்று கருதாமல் இருக்கலாம்; அல்லது மருந்துகள் குறித்த மத அல்லது கலாச்சார நம்பிக்கைகள், சிகிச்சை தொடர்பான முடிவுகளை மேலும் சிக்கலாக்கக்கூடும். இருப்பினும், இவ்வாறான கவலைகளை நடத்தை மாற்று முறைகள் (behaviour change techniques) மூலம் பல நேரங்களில் சமாளிக்க முடியும் (படி 2 ஐ பார்க்கவும்).

ஒரு நோயாளி முழுமையாக சிகிச்சைக்கு தயாராக இருந்தாலும் கூட, சிகிச்சை தொடங்கிய பிறகு பல தடைகளை எதிர்கொள்ளக்கூடும். அவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்துவிடலாம், வழிமுறைகளைப் புரிந்துகொள்ள சிரமப்படலாம், அல்லது குடும்ப மற்றும் வேலை பொறுப்புகள் போன்ற பிற கடமைகளால் பாதிக்கப்படலாம். சில நேரங்களில், ஒரு அல்லது இரண்டு நாட்களில் உடல்நிலை மேம்பட்டதாக உணர்வதும் சிகிச்சையை முன்கூட்டியே நிறுத்த வழிவகுக்கலாம்.சிகிச்சையை முறையாக பின்பற்றுவது (adherence) என்பது வெறும் விருப்பத்துடன் மட்டுமே தொடர்புடையதல்ல — அது அந்த சிகிச்சை ஒருவரின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதுடனும் தொடர்புடையது. இதை முன்கூட்டிய திட்டமிடல் மூலம் ஆதரிக்க முடியும் (படி 3 ஐ பார்க்கவும்).

COVID-19 நோயறிதல் மற்றும் சிகிச்சை செயல்முறைகளில் அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளை ஆதரிப்பதில், நடத்தை அறிவியலையும் கலாச்சாரப் பின்னணியைப் ( cultural sensitivity) புரிந்துகொள்ளும் அணுகுமுறையையும் இணைத்து செயல்படும்போது சிறந்த விளைவுகளை பெற முடியும்; கீழே உள்ள பரிந்துரைகளும் இந்த இரு அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நடைமுறை பரிந்துரைகள்

படி 1: நோயறிதலை தெரிவிக்கும் போது பாதுகாப்பான மற்றும் மரியாதையான சூழலை உருவாக்குங்கள்

நோயாளியின் பலங்கள் அல்லது வாழ்க்கை மதிப்புகளை ( values) அங்கீகரிப்பதன் மூலம் உரையாடலைத் தொடங்குங்கள் — இது தற்காப்பு மனப்போக்கை ( defensiveness) குறைத்து, நம்பிக்கையூட்டும் உறவை உருவாக்க உதவும். இத்தகைய தற்காப்பு எதிர்வினைகளின் அபாயத்தை குறைக்கும் ஒரு முறையாக “affirmation” அணுகுமுறை குறிப்பிடப்படுகிறது. இதில், நோயாளிகள் தங்களின் தனிப்பட்ட பலங்கள் மற்றும் வாழ்க்கையில் அவர்கள் வகிக்கும் மதிப்புமிக்க பங்குகள் குறித்து சுருக்கமாக சிந்திக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, அவர்கள் அன்பான துணைவர், அக்கறையுள்ள பெற்றோர், அல்லது முக்கியமான சக ஊழியர் போன்ற பிறருக்கு அர்த்தமுள்ள நபர்களாக இருப்பதை நினைவுபடுத்துவது, தொற்று ஏற்பட்டிருப்பது என்ற பின்னடைவை மட்டும் கவனிப்பதை விட அதிக பயனளிக்கக்கூடும். இத்தகைய அணுகுமுறை, நோயாளியின் தன்னம்பிக்கையை ஆதரித்து, நோயறிதலையும் அதனைத் தொடர்ந்து தேவையான சிகிச்சை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை அதிகரிக்க உதவலாம்.

தவறான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, அவற்றை அமைதியாகவும் தெளிவாகவும் திருத்துவது முக்கியம். இதற்காக “fact sandwich” எனப்படும் முறையை பயன்படுத்தலாம்: முதலில் உண்மையான தகவலை கூறுங்கள்; பின்னர் தவறான நம்பிக்கையை சுருக்கமாக குறிப்பிடுங்கள்; அது ஏன் தவறானது என்பதை விளக்குங்கள்; இறுதியாக மீண்டும் சரியான தகவலை வலியுறுத்துங்கள். குறிப்பாக குறைந்த நல அறிவுத்திறன்    (health literacy) அல்லது மொழித்திறன் குறைவுள்ள நோயாளிகளுடன் பேசும்போது, விளக்கங்களை எளிமையாகவும் கலாச்சாரப் பின்னணிக்கு பொருத்தமானதாகவும் வழங்குவது மிகவும் அவசியமாகும்.

படி 2: சிகிச்சையை ஏற்கும் மனப்பான்மையை ஊக்குவிக்க தெளிவான மற்றும் தாக்கமிக்க தகவல் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துங்கள்

Motivational interviewing முறைகள் — திறந்த கேள்விகள், பிரதிபலிப்பு அடிப்படையிலான கேட்பு முறை (reflective listening), மற்றும் நேர்மறை அங்கீகாரங்கள் (affirmations) — நோயாளிகள் சிகிச்சையை ஏற்க வேண்டிய தங்களுடைய சொந்த காரணிகளை அடையாளம் காண உதவக்கூடும். இது வெறும் சம்மதிக்கச் செய்வதை (pursuasion) விட அதிக பயனுள்ளதாக இருக்கும்.

கதையாடல் முறைகளும் (narratives) உதவியாக இருக்கலாம். உதாரணமாக, மற்றொரு நோயாளியின் அனுபவத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான கதை, அல்லது தகவல் விளக்கப்படங்கள் (infographics) மற்றும் ஓவிய வடிவ விளக்கங்கள் ( visual aids) போன்ற காட்சிப்படுத்தப்பட்ட உதவிக்கருவிகள் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, சிகிச்சையுடன் மற்றும் சிகிச்சையில்லாமல் இருக்கும் வைரஸ் அளவை (viral load) காட்டும் எளிய படம், ஆரம்ப சிகிச்சை ( early tretement) ஏன் முக்கியம் என்பதை விளக்கி, உடல்நிலை மோசமடையும் அபாயத்தை நோயாளிகள் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.

மேலும், சிகிச்சையைப் பற்றிய நன்மைகள் மற்றும் சவால்களை நோயாளிகள் தாங்களே சிந்தித்து மதிப்பிட ஊக்குவிக்கலாம். இதில், அவர்களின் தனிப்பட்ட உடல்நல நலன்கள் மட்டுமல்லாமல், குணமடைதல் அவர்களின் சமூக வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம். உதாரணமாக, குடும்பத்தினருடன் இருப்பது அல்லது நெருக்கமான உறவுகளை பராமரிப்பது போன்ற அம்சங்கள் இதில் அடங்கும்.

குறிப்பாக முதியவர்களுக்கு, சிகிச்சையின் உணர்ச்சிபூர்வமான மற்றும் உடனடி நன்மைகளை எடுத்துக்காட்டுது (உதாரணமாக, விரைவாக குணமடைவதால் பேரக்குழந்தையை சந்திக்கலாம்), நீண்டகால உடல்நல இலக்குகளை எடுத்துக்காட்டுவதைவிட (உதாரணமாக, பல நோய்கள் சேர்ந்து ஏற்படுத்தும் அபாயங்களைத் தவிர்ப்பது போன்றவை) அதிக நம்பிக்கையூட்டுவதாக இருக்கக்கூடும்.

படி 3: நடைமுறை திட்டமிடலின் மூலம் சிகிச்சையை தொடர்ந்து பின்பற்ற உதவுங்கள்

நோயாளியுடன் இணைந்து ஒரு தெளிவான செயல்திட்டத்தை ( concrete action plan) உருவாக்குங்கள் — மருந்துகளை எங்கு வைப்பது, எந்த நேரங்களில் அவற்றை அன்றாட நடைமுறைகளுடன் இணைத்து எடுத்துக்கொள்வது, மற்றும் எந்த நினைவூட்டல்கள் ( cues) அவர்களை மருந்து எடுத்துக்கொள்ளத் தூண்டும் என்பதைக் குறித்து முன்கூட்டியே திட்டமிடுங்கள். இது சிகிச்சையை தொடர்ந்து பின்பற்றுவதை எளிதாக்கி, வெறும் நினைவாற்றலின் மீது சார்ந்திருப்பதை குறைக்க உதவும்.

“Implementation intention strategies” எனப்படும் திட்டமிடல் முறைகளும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். உதாரணமாக, “மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் நான் வேலை இடத்தில் இருந்தால், அப்போது நான்…” போன்ற முன்கூட்டிய செயல்திட்டங்கள், அன்றாட நடைமுறைகள் மாறினாலும் சிகிச்சையை தொடர்ந்து பின்பற்ற உதவும். மருந்து ஒழுங்குபடுத்தும் பெட்டிகள் (pill organisers), அலாரம் நினைவூட்டல்கள், மற்றும் கண்களுக்கு தென்படும் நினைவூட்டும் குறிப்புகள் போன்றவை, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ள உதவக்கூடும்.

மேலும், நோயாளிகள் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வதில் ஏற்படக்கூடிய சிரமங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளை அவர்களுடன் சேர்ந்து திட்டமிட உதவலாம். குடும்பத்தினர், நண்பர்கள், அல்லது நெருங்கியவர்களிடம் ஆதரவை நாடுமாறு அவர்களை ஊக்குவிக்கவும்; சமூக வட்டாரத்தினரிடமிருந்தும் ஆதரவைப் பெற ஊக்குவிக்கவும்; பல நேரங்களில், உதவுவதற்கான வாய்ப்பை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு கட்டத்திலும் நோயாளியின் கலாச்சாரத்தை கருத்தில் கொள்ளும் சிகிச்சை அணுகுமுறை (culturally responsive care) மிகவும் முக்கியமானது. நோயாளிகளின் நம்பிக்கைகள், குடும்பப் பொறுப்புகள், அல்லது அவர்கள் விரும்பும் மொழிகள் குறித்து கேள்வி கேட்பது, வழங்கப்படும் சிகிச்சைத் திட்டம் அவர்களுக்கு மரியாதையானதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் உணரப்பட உதவும்.

நம்பிக்கையூட்டும் உறவை உருவாக்குதல் ( rapport building), நோயாளிகளின் உந்துதலை ஆதரித்தல் (motivational support), மற்றும் நடைமுறை திட்டமிடலை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் மூலம், சுகாதாரப் பணியாளர்கள் சிகிச்சை விளைவுகளை  மேம்படுத்தி, அதிகமாக ஆதரவு தேவைப்படும் நோயாளிகளுக்கிடையேயான சமமின்மைகளை குறைக்க உதவ முடியும்.

மொழிபெயர்ப்பு: ரிஸ்மினா ரிழ்வான்

Practical Health Psychology

Translating research to practice, one blog post at a time

Subscribe

Sign up today to get notified whenever a new blog post is published!

And don’t worry, we hate spam too! You can unsubscribe at anytime.