Practical Health Psychology

Translating research to practice, one blog post at a time

Practical Health Psychology
நடத்தை மாற்றத்தின் மூலம் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளில் COVID-19 சிக்கல்களைத் தடுப்பது

நடத்தை மாற்றத்தின் மூலம் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளில் COVID-19 சிக்கல்களைத் தடுப்பது

டேவிட் சைமன்ஸ், பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம்; அய்ஷெகுல் பகிர், ஹசெட்டெப்பே பல்கலைக்கழகம், துருக்கி; யோஹன்னா நூர்மி, ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து

பொதுவாக, COVID-19 கடந்தகாலத்தில் நடந்த ஒன்றாகவும், வெறும் சுவாசத் தொற்றுநோயாகவும் மட்டுமே விவரிக்கப்படுகிறது. ஆனால், குறிப்பாக முன்பிருந்த இதய நோய், மாற்றச்சத்து கோளாறுகள் (metabolic disorders), நோய் எதிர்ப்பு குறைபாடுகள் அல்லது சுவாச நோய்கள் கொண்ட அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு,  COVID-19 இன்னும் உடல்நலத்திற்கு திடீர் மொத்த உடல் அழுத்தத்தை ( acute systematic stressor) ஏற்படுத்தும் நோயாகவே உள்ளது. அச்சுறுத்தலை ஏற்படுத்துவது வைரஸ் மட்டும் அல்ல; அது தூண்டக்கூடிய உடலியல் நிலைமைக் குறைபாடுகளின் (physiological decompensation) தொடர் விளைவுகளும் ஆகும்.

சுகாதார நிபுணர்களாகிய நாம், இந்த நோயின் மருத்துவ முன்னேற்றப் பாதையை நன்கு அறிந்திருக்கிறோம். நீண்டகால தடுப்புச் சுவாச நோய் (obstructive pulmonary disease) அல்லது இடைநுரையீரல் நோய் (interstitial lung disease) கொண்ட ஒரு நோயாளிக்கு Acute Respiratory Distress Syndrome (ARDS) ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த பாதிப்பிற்கான சாத்தியம், மாற்றச்சத்து தொடர்பான நோய்களால் ( metabolic conditions) மேலும் அதிகரிக்கப்படுகிறது. குறிப்பாக, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு அல்லது கடுமையான உடல் பருமன் கொண்ட நோயாளிகளில், நீடித்த குறைந்த அளவிலான அழற்சி ( chronic low-grade inflammation )மற்றும் அடிப்படை இரத்த நாள உள் சுவர் செயலிழப்பு (endothelial dysfunction) ஆகியவை, உடலை அதிகப்படியான அழற்சி எதிர்வினைக்கு (hyperinflammatory response) முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்கின்றன.இதன் விளைவாக, COVID-19 ஏற்படுத்தும் மொத்த உடல் அழற்சி, இதய செயலிழப்பு மோசமாதல் (decompensated heart failure), பரவலான நுண்ணிரத்த நாள உறைதல் (microvascular thrombosis), அல்லது திடீர் சிறுநீரக சேதம் ( acute kidney injury) போன்ற கடுமையான நிலைகளை எளிதில் தூண்டக்கூடும்.

நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களில் (immunocompromised individuals), ஒழுங்கற்ற நோய் எதிர்ப்பு எதிர்வினையும் ( dysregulated immune response ) நீண்டகால வைரஸ் வெளியேற்றமும் (viral shedding) கூடுதல் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் அதிக ஆபத்தான சூழலை உருவாக்குகின்றன. இதனால் நோயின் தீவிரம் வேகமாக அதிகரிக்கிறது. மேலும், திடீர் மூளை செயலிழப்பு (acute encephalopathy) மற்றும் குழப்பநிலை (delirium) உள்ளிட்ட நரம்பியல் சிக்கல்கள் அதிகரித்திருப்பதையும் நாம் காண்கிறோம். இவை குறிப்பாக முதியவர்களுக்கு மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை (Activities of Daily Living – ADLs) சுயமாக மேற்கொள்ளும் திறன் திடீரெனவும் கடுமையாகவும் குறைகிறது. இதனால் நோயாளியின் சுயநிறைவு பாதிக்கப்படுவதுடன், அவசர மருத்துவமனை அனுமதி மற்றும் நீண்டகால தீவிர சிகிச்சை தேவையும் உருவாகிறது.

இந்த சிக்கல்களின் சுமை ஒருவரின் உடல்நிலையை மட்டும் அல்லாமல் அதையும் மீறி விரிவடைகிறது. ஒரு முதியவர் குழப்பநிலை (delirium) காரணமாக தனது இயல்பான செயல்திறன் நிலையை இழக்கும்போது, அல்லது நோய் எதிர்ப்பு திறன் குறைந்த ஒருவர் இரண்டாம் நிலை பாக்டீரியா நுரையீரல் அழற்சி (secondary bacterial pneumonia) ஏற்படும்போது, அவர்களுக்கு வெறும் குறுகிய கால மருத்துவமனை அனுமதி மட்டும் தேவைப்படுவதில்லை. மாறாக, சிக்கலான மற்றும் தீவிர அவசர சிகிச்சைகள், பல்துறை ஒருங்கிணைந்த மேலாண்மை, மற்றும் பெரும்பாலும் நீண்டகால புனர்வாழ்வு சேவைகள் ஆகியவை அவசியமாகின்றன. இதனால் சுகாதார அமைப்பின் முழு கட்டமைப்பிலும் அலைபாய்வு போன்ற தாக்கம் ஏற்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் முதியோர் பராமரிப்பு வார்டுகள் முழு கொள்ளளவை எட்டுகின்றன, திட்டமிட்ட (elective) சிகிச்சைகள் ரத்து செய்யப்படுகின்றன, மேலும் பிற நீண்டகால நோய்களுக்கான சிகிச்சை தொடர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

மேலும், தடுக்கக்கூடிய இந்த தீவிர நிலைகளை நிர்வகிப்பதிலும், திடீரென தங்கள் சுதந்திரத்தை இழந்த நோயாளிகளுக்கு சிக்கலான வெளியேறும் நடைமுறைகளைச் (discharge pathways) செயல்படுத்துவதிலும் ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தம், சுகாதாரப் பணியாளர்களிடையே வேலைச் சோர்வு (staff burnout) மற்றும் நெறிமுறை பாதிப்பு (moral injury) ஆகியவற்றுக்கு வழிவகுக்கலாம்.

நெறிமுறை பாதிப்பு (moral injury) என்பது, ஒருவர் தனது நெறிமுறை அல்லது தொழில்முறை மதிப்புகளுக்கு முரணான வகையில் செயல்பட வேண்டிய நிலை ஏற்படும்போது உருவாகும் ஆழமான மனஅழுத்தம் மற்றும் சிக்குணர்வை குறிக்கிறது. மறுபுறம், வேலைச் சோர்வு (burnout) என்பது வேலை தொடர்பான நீண்டகால அழுத்தங்கள் காரணமாக உருவாகும் உணர்ச்சி சோர்வு, தன் திறன் மற்றும் உற்பத்தித்திறன் குறித்த சந்தேகங்கள், மற்றும் மனித உறவுகளில் இருந்து விலகும் நடத்தை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும். இவ்விரண்டும் (moral injury மற்றும் burnout) பதட்டம் ( anxiety), மனச்சோர்வு (depression) மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகளை ( somatic symptom levels) அதிகரிக்கக்கூடும்; மேலும் நோயாளி பாதுகாப்பு, தொழிலை விட்டு வெளியேற வேண்டிய எண்ணம், மற்றும் சுகாதார சேவையின் ஒட்டுமொத்த தரம் ஆகியவற்றிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

நடத்தை சார்ந்த இடைவெளி (The behavioural bridge)

மிதமான ஆரம்பத் தொற்றுக்கும் மருத்துவமனை அனுமதிக்கும் இடையிலான இடைவெளி பெரும்பாலும் நடத்தை சார்ந்ததாகும். அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகள் ஏன் சிகிச்சை தேடுவதில் தாமதம் செய்கிறார்கள், அல்லது ஆரம்பத்திலேயே மிகச் செயல்திறன் கொண்ட வைரஸ் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு ஒழுங்குபடுத்தும் சிகிச்சைகளை ஏன் மறுக்கிறார்கள்?

௨ளவியல் ஆய்வுகள் காட்டுவதாவது, நோயின் ஆரம்ப கட்டங்களில் நோயாளிகள் தங்களுடைய அபாயத்தை அடிக்கடி தவறாக மதிப்பிடுகின்றனர். நோய் எதிர்ப்பு திறன் குறைந்த ஒரு நோயாளர் லேசான இருமலை அனுபவிக்கும்போது, அது சாதாரண மேல் சுவாசத் தொற்று எனக் கருதி (upper respiratory tract infection), கடுமையான சிக்கல்களைத் தடுப்பதற்கான குறுகிய நேர சிகிச்சை வாய்ப்பை உணராமல் இருக்கலாம். அதேபோல், குழப்பநிலையின் (delirium) ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு முதியவர், தனது உடல்நிலை குறைவதை சரியாக மதிப்பிட முடியாமல், தமக்கான சிகிச்சையை வலியுறுத்தவும் இயலாது.

மேலும், அபாயத்தை உணர்வதில் உள்ள அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி சார்ந்த பாகுபாடுகள் (cognitive and emotional biases) தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, congestive heart failure கொண்ட ஒரு நோயாளர் COVID-19 காரணமாக ஏற்படும் வலியை, தங்களுக்குப் பழக்கமான நீண்டகால மார்பு வலியுடன் ஒப்பிட்டு சாதாரணமாகக் கருதலாம். புதிய ஆபத்தை எதிர்கொள்வதில் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக அவர்கள் அதை மறுக்கக்கூடும், அல்லது குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் லேசாக இருக்கும் போது “எனக்கு பெரிய பிரச்சினை இருக்காது” என்ற நம்பிக்கை பாகுபாடு (optimism bias) ஏற்பட்டு, தாங்கள் அதிக ஆபத்து கொண்ட குழுவில் இருப்பதை உணராமல் இருக்கலாம்.

சிகிச்சை தொடர்பான தயக்கம் (treatment hesitancy) தொடர்ந்து பொதுவாகவே காணப்படுகிறது. நோயாளிகள் புதிய மருந்துகளின் மீது நம்பிக்கை இல்லாமலிருக்கலாம், அல்லது தங்கள் அறிகுறிகளை “நான் ஒருபிரச்சனையாக மாட்டேன்” என்ற எண்ணத்தில் குறைத்து மதிப்பிடலாம். மேலும், சிக்கலான சுகாதார சேவை வழிமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதால், அவர்கள் சிகிச்சை பெறுவதிலிருந்து விலகியும் இருக்கலாம்.

மருத்துவ அறிவு மட்டுமே இந்த இடைவெளியை நிரப்ப முடியாது. தவிர்க்கக்கூடிய மருத்துவமனை அனுமதிகளை குறைத்து, நோயாளிகளைப் பாதுகாப்பதோடு சுகாதார சேவைகளின் திறனையும் பராமரிக்க வேண்டுமெனில், நடத்தை அறிவியலை (behavioural science) எமது வழக்கமான மருத்துவ ஆலோசனைகளுடன் சீராக ஒருங்கிணைக்க வேண்டும். மருத்துவ தகவல்களை வெறுமனே வழங்கும் நிலையை விட்டு விலகி, நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் தங்கள் நடத்தை மாற்றத்தைச் செயலில் மேற்கொள்ள உதவுவதற்கான அணுகுமுறைக்குத் திசைமாற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட நடத்தை மாற்ற நுட்பங்களை (Behaviour Change Techniques – BCTs) பயன்படுத்துவதன் மூலம், அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளும் அவர்களது ஆதரவு வலையமைப்பும் சிக்கல்கள் கடுமையாக மாறுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்க சக்தியூட்டப்படலாம். இந்த முன்னெச்சரிக்கை அணுகுமுறை, நோயாளிகளையும் அவர்களது பராமரிப்பாளர்களையும் சிகிச்சையை வெறுமனே பெறுபவர்களாக இருப்பதிலிருந்து தங்களது உடல்நல கண்காணிப்பில் செயலில் ஈடுபடும் பங்கேற்பாளர்களாக மாற்றுகிறது. இறுதியில், இது சுகாதார அமைப்பின் திறனைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நடைமுறை பரிந்துரைகள்


COVID-19 சிக்கல்களின் பாரத்தை குறைப்பதற்காக, அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளும் அவர்களது பராமரிப்பாளர்களும் உடன் நடைபெறும் ஆலோசனைகளில், ஆதாரப்பூர்வமான (evidence-based) கீழ்க்கண்ட மூன்று நடத்தை மாற்ற நுட்பங்களை (Behaviour Change Techniques – BCTs) ஒருங்கிணைக்கவும்:

  • தேசிய மருத்துவத் தூண்டுதல் ( clinical triggers) நெறிமுறைகளைத் தரப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல்:

“உடல்நிலை மோசமடைந்தால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்” போன்ற பொதுவான ஆலோசனைகளைத் தவிர்க்கவும். அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கும், குறிப்பாக குழப்பநிலை (delirium) அபாயம் உள்ள முதியவர்களை பராமரிப்போருக்கும், துல்லியமான மற்றும் தெளிவான மருத்துவ எச்சரிக்கை அறிகுறிகள் அவசியமாகின்றன.

செயல்படுத்துவது எப்படி: ஒரு தெளிவான திட்டத்தை எழுதி வைக்கவும். சுவாசப் பிரச்சனை மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கான அறிகுறிகளை வரையறுக்கவும்: உங்கள் இரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு (oxygen saturation) 92% க்கும் கீழே குறைந்தாலோ, அல்லது திடீர் குழப்பம் ஏற்பட்டு அன்றாடப் பணிகளைச் செய்வதில் சிரமம் இருந்தாலோ, உடனடியாக வெளிநோயாளர் பிரிவுகளைத் (OPD) தவிர்த்துவிட்டு 1990 Suwa Seriya அவசர ஊர்தி சேவையை அழைக்கவும் அல்லது அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் (ETU) செல்லவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு, தேசிய ஆரம்ப சுகாதாரக் கண்காணிப்பு வழிகாட்டுதல்களை (national primary care monitoring criteria) பயன்படுத்தவும்: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிக்கும் அதிர்வெண்ணைக் ( blood glucose testing frequencies ) குறிப்பிடவும் (எ.கா., வீட்டில் உள்ள குளுக்கோமீட்டரைப் பயன்படுத்தி ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும்) மற்றும் குறிப்பிட்ட வாய்வழி ஹைபோகிளைசீமிக் (oral hypoglycaemics) மருந்துகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க, பராமரிப்பாளர் உடனடியாக மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியை அல்லது வேறு ஏதேனும் மருத்துவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.நோயாளிகளும் அவர்களது பராமரிப்பாளர்களும் தேவையான எந்தவொரு வீட்டு கண்காணிப்பு உபகரணங்களையும் பயன்படுத்த பயிற்சி பெற்றுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 

  1. தயக்கத்தைப் போக்க பாதிப்பைத் தனிப்பயனாக்குங்கள் (Personalise the threat to overcome hesitancy)

நோயாளிக்கு ஆரம்பக்கட்ட அறிகுறிகள் “லேசாக” இருப்பதால், அவர்கள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (antivirals) உட்கொள்ளத் தயங்கும்போது, அவர்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட பிற நோய்ப் பாதிப்புகளோடு (comorbidity) இந்த ஆபத்தை நேரடியாகத் தொடர்புபடுத்திக் கூறுங்கள். இது நிலைமையின் தீவிரத்தை அவர்கள் உணர்வதை அதிகரிக்கும்.

இதை எவ்வாறு செயல்படுத்துவது: “கோவிட்-19 ஆபத்தானது” என்று பொதுப்படையாகக் கூறுவதற்குப் பதிலாக, அதன் விளைவை அவர்களது பாதிப்போடு தனிப்பயனாக்கிப் பேசுங்கள்: “உங்களது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், தற்போது உங்களுக்குத் தொண்டை வலி மட்டுமே இருந்தாலும், இந்த வைரஸ் எளிதாக தீவிரமான பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்தக்கூடும். அந்தப் பாக்டீரியாக்கள் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பாகவே, இந்த மருந்து வைரஸை உடலிலிருந்து அழிக்க உதவுகிறது”.


  1. சமூக ஆதரவு அமைப்பைச் செயல்படுத்துங்கள் (Activate the social support system)

உடல்நலக்குறைவு ஏற்படும் போது சுகாதார அமைப்பைப் பயன்படுத்துவது சோர்வளிப்பதாக இருப்பதாலும், அல்லது கடுமையான அறிவாற்றல் வீழ்ச்சி (acute cognitive decline) அவர்கள் செயல்படுவதைத் தடுப்பதாலும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள நோயாளிகள் பெரும்பாலும் சிகிச்சையைப் பெற தாமதிக்கின்றனர்.

இதை எவ்வாறு செயல்படுத்துவது: வழக்கமான ஒரு வெளிநோயாளிப் பிரிவின் (outpatient) பரிசோதனையின் போது, அவர்களிடம் இவ்வாறு கேளுங்கள்: “நாளை உங்களுக்குப் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானால், உங்களை மருந்தகத்திற்கு (pharmacy) அல்லது மருத்துவமனைக்கு யார் அழைத்துச் செல்வார்கள்?” ஒரு “பராமரிப்பு ஆதரவாளரை” (குடும்ப உறுப்பினர், அண்டை வீட்டார்) கண்டறிந்து, அவர்களை உங்களது செயல்பாட்டுத் திட்டத்தில் (Action Plan) சேர்த்துக்கொள்ளுங்கள். இது முதியவர்களுக்கு மிகவும் அவசியமானது; ஆரம்பகால மருத்துவ ரீதியான உடல்நலக் குறைபாட்டைக் கண்டறிந்து உடனடியாகச் செயல்படவும், முறையியல் தாமதங்களைத் (systemic delays) தவிர்க்கவும், நியமிக்கப்பட்ட பராமரிப்பாளர் ஒருவர் மனக்குழப்பத்தின் (delirium) அறிகுறிகளைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பதை உறுதி செய்வது உதவும்.

மொழிபெயர்ப்பு: ரிஸ்மினா ரிழ்வான்

Practical Health Psychology

Translating research to practice, one blog post at a time

Subscribe

Sign up today to get notified whenever a new blog post is published!

And don’t worry, we hate spam too! You can unsubscribe at anytime.