பங்களிப்பாளர்கள்: ஆஸ்டின் சோகாங், யுனிவர்சிடாஸ் கிறிஸ்டன் கிரிடா வகானா, இந்தோனேசியா; டிரியானா கேசுமா தேவி, யுனிவர்சிடாஸ் ஏர்லாங்கா, இந்தோனேசியா; யுஹாங் ஜு, ஷான்டாங் இரண்டாவது மருத்துவ பல்கலைக்கழகம், சீனா; கில் டென் ஹூர், மாஸ்ட்ரிச்ட் பல்கலைக்கழகம், நெதர்லாந்து
பல பெரியவர்களுக்கு, கோவிட் -19 சோர்வு, இருமல் அல்லது லேசான காய்ச்சல் போன்ற லேசான உடல் நலக்குறைவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால், சில குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இந்தத் தொற்று மருத்துவமனையில் அனுமதி பெற வேண்டிய நிலை அல்லது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், இவ்வாறான நோயாளிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் அறிகுறிகள் தொடங்கிய உடனேயே சிகிச்சை வழங்கப்படும் போது அது மிகச் சிறப்பாக செயல்படும்.
சமீபத்திய தரவுகள் தொடர்ந்து காட்டுவதாவது, வயது அதிகரிக்கும் போது கடுமையான COVID-19 ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. அதேபோல், இதய மற்றும் இரத்த நாள நோய்கள் ( cardiovascular disease), நீரிழிவு ( diabetes), அதிக உடல் எடை( obesity), நீண்டகால நுரையீரல் நோய்கள் ( chronic lung disease), புற்றுநோய், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு (immunosuppression) போன்ற முன்பிருந்த உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் கடுமையான COVID-19 ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. வயதானவர்கள் மற்றும் பல சுகாதார நிலைமைகளுடன் வாழும் மக்கள் குறிப்பாக கடுமையான விளைவுகளுக்கு ஆளாகிறார்கள்.
வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள் (antiviral therapies), COVID-19 அறிகுறிகள் தொடங்கிய முதல் ஐந்து நாட்களுக்குள் வழங்கப்படும்போது, கடுமையான பாதிப்புகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும், அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளை (high risk patients) விரைவாக அடையாளம் காணுவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், உடலில் வைரஸ் நீண்ட காலம் செயலில் இருந்து பெருகிக்கொண்டிருக்கும் ( prolonged viral replication) பாதிக்கப்படக்கூடிய சில நோயாளிகளுக்கு, சிகிச்சை தாமதமாக வழங்கப்பட்டாலும் கூட அது இன்னும் நன்மை அளிக்கக்கூடும்.
ஏன் அதிக ஆபத்து கொண்ட நோயாளிகள் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படுகிறார்கள்?
தெளிவான மருத்துவ வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், ஆரம்பகட்ட சிகிச்சையைப் பெற தகுதியான சில நோயாளிகள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படுவதில்லை. பல நேரங்களில், மருத்துவர்கள் நோயாளியின் தற்போதைய அறிகுறிகளின் கடுமையை (symptom severity) மட்டுமே முக்கியமாக கவனிக்கிறார்கள்; ஆனால் அவர்களின் அடிப்படை உடல்நல ஆபத்துக்கள் ( underlying risks) போதுமான அளவில் மதிப்பிடப்படாமல் போகலாம்.
உதாரணமாக, லேசான அறிகுறிகளுடன் (mild-symptoms) வரும் நோயாளிகள், அவர்களுக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் உடல்நலக் காரணிகள் இருந்தாலும் கூட, உடனடியாக மேலதிக பரிசோதனை அல்லது மதிப்பீட்டிற்காக (further evaluation) பரிந்துரைக்கப்படாமல் இருக்கலாம்.
மேலும், சில நேரங்களில் ஆபத்து என்பது ஒரே ஒரு கடுமையான உடல்நலக் குறைபாட்டால் அல்லாமல், பல மிதமான ஆபத்து காரணிகள் ( multiple moderate factors) ஒன்றாக இணைவதன் மூலம் உருவாகிறது. மருத்துவ வழிகாட்டுதல்கள், ஒருவருக்கு உள்ள அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் ( underlying conditions) அதிகரிக்கும் போது கடுமையான நோய் ஏற்படும் அபாயமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்துகின்றன.அதனால், ஒவ்வொரு உடல்நலக் குறைபாட்டையும் தனித்தனியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, வயது முதிர்வு, உயர் இரத்த அழுத்தம், அதிக உடல் எடை போன்ற பல காரணிகளை ஒன்றாகக் கொண்டு மொத்த ஆபத்து நிலையை ( overall risk profile) மதிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும்.
பணிச்சுமை அதிகமான மருத்துவ சூழல்களில் நேர அழுத்தமும் ( time pressure) இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பல நேரங்களில், மருத்துவர்கள் முழுமையற்ற நோயாளர் வரலாறு அல்லது முக்கியமான ஆபத்து காரணிகளை ( risk factors) தெளிவாகக் காட்டாத மருத்துவ பதிவுகள் போன்ற வரையறுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விரைவாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக, ஆபத்து காரணிகள் உடனடியாக வெளிப்படையாகத் தெரியாதபோது, முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள் (important cues) கவனிக்கப்படாமல் போகலாம்.
கட்டமைப்பு மற்றும் நடத்தை சார்ந்த தடைகளும், யார் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுகின்றார்கள் என்பதை பாதிக்கின்றன. தொற்றுநோய் காலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இன (race) மற்றும் இனத்துவ(ethnic) சிறுபான்மை (minorities) சமூகங்கள், அதேபோல் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் குழுக்கள், COVID-19 தொற்று, மருத்துவமனையில் அனுமதி, மற்றும் மரணம் ஆகியவற்றை அதிக அளவில் அனுபவித்துள்ளன என்பதை காட்டுகின்றன. இந்த வேறுபாடுகள், சுகாதார சேவைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதில் உள்ள அணுகல் (access to healthcare) சமமின்மைகளுடன் பகுதியளவில் தொடர்புபடுகின்றன.
நோயாளிகளும் தாமாகவே சிகிச்சையைத் தேடுவதில் தாமதம் செய்யக்கூடும். பலர் லேசான அறிகுறிகள் இருந்தால் அது குறைந்த ஆபத்து என்பதாக நினைக்கலாம், அல்லது ஆரம்பத்திலேயே சிகிச்சை தொடங்கப்படும் போது தான் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறியாமல் இருக்கலாம். மருத்துவர்களிடமிருந்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாதபோது, இந்நோயாளிகள் சிகிச்சை பயனளிக்கும் காலத்தைத் தாண்டிய பின்னரே மருத்துவ உதவிக்காக வரக்கூடும்.
மேலும், காலப்போக்கில் ஆபத்தைப் பற்றிய மக்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தொற்றுநோயின் ஆரம்பகட்டத்தில், அதிகமான ஆபத்து விழிப்புணர்வு ( high risk awareness) காரணமாக மக்கள் மற்றும் மருத்துவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆனால் தற்போது நிலைமை ஓரளவு மேம்பட்டுள்ளதால், லேசான COVID-19 நோய்த்தொற்றுகள் அவசரமற்றதாகத் தோன்றக்கூடும். இதன் காரணமாக, நோயாளிகளும் சுகாதாரப் பணியாளர்களும் ஆபத்தை முறையாக மதிப்பிடுவதற்கான கவனத்தையும் ஊக்கத்தையும் குறைத்துக்கொள்ளக்கூடும்.
நடத்தைசார் அறிவியல் எவ்வாறு சிறந்த அடையாளங்காணலுக்கு உதவுகிறது?
முதல் பார்வையில், இந்த சவால் முழுமையாக மருத்துவப் பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளை ( high risk patients) தொடர்ந்து மற்றும் துல்லியமாக அடையாளம் காண மருத்துவர்களுக்கு உதவும் நடைமுறை கருவிகளை நடத்தை அறிவியல் (Behavioural Science) வழங்குகிறது.
மருத்துவர்கள் பெரும்பாலும் அதிகமான மனச்சுமை மற்றும் சிந்தனை அழுத்தம் ( high cognitive overload) நிறைந்த சூழலில் பணியாற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், நினைவாற்றல் அல்லது உடனடி ஊகங்களையே நம்பாமல், முக்கியமான ஆபத்து காரணிகளை (Risk factors) ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய உதவும் நினைவூட்டல்கள் (prompts) மற்றும் சரிபார்ப்பு பட்டியல்கள் (checklists) போன்ற கருவிகள் முடிவெடுப்பை எளிமையாக்க உதவக்கூடும்.மேலும், மின்னணு மருத்துவப் பதிவுகள் (Electronic Medical Records – EMRs) கிடைக்கும் இடங்களில், அவையும் ஆரம்பகட்ட அடையாளங்காணலுக்கு ஆதரவளிக்கக்கூடும். வயது, நீண்டகால நோய்கள், அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற அறியப்பட்ட ஆபத்து காரணிகள் ( known risk factors) உள்ள நோயாளிகளை தானியங்கி எச்சரிக்கைகள் (automated alerts) மூலம் குறியிடுவதன் மூலம், அவர்களுக்கு சிகிச்சை வழங்கத் தகுதி உள்ளதா என்பதை மருத்துவர்கள் விரைவாக மதிப்பிட உதவலாம்.
ஆபத்து நிலை ( risk) மற்றும் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதின் முக்கியத்துவம் குறித்து தெளிவான தகவல் பரிமாற்றம் வழங்கப்படுவது, அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண உதவக்கூடும். நோயாளிகள் தங்களுடைய ஆபத்து நிலையை நன்கு புரிந்துகொள்ளும்போது, அறிகுறிகள் மோசமடையும் வரை காத்திருக்காமல், COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே சுகாதார சேவை வழங்குநர்களை விரைவாக தொடர்புகொள்ள அதிக வாய்ப்பு இருக்கும்.
மேலும், “உங்களுக்கு விரைவாக சிகிச்சை பெறுவதில் என்ன சிரமங்கள் இருக்கலாம்?” போன்ற குறிக்கோள் கொண்ட கேள்விகளை ( targeted questions) கேட்பது அல்லது சிகிச்சையை அணுகுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அக்கறை காட்டுவது, வெளிப்படையாக தெரியாத தடைகளை கண்டறிய உதவக்கூடும்.உதாரணமாக, “நீங்கள் ஒரு மருத்துவரைச் சந்திக்கலாம்” போன்ற பொதுவான அறிவுறுத்தல்கள், சுகாதார உதவியை நாடும் நடத்தையை ( health seeking behaviour) ஊக்குவிப்பதில் பெரும்பாலும் குறைந்த பயனுடையதாக இருக்கும். அதற்கு பதிலாக, “இந்த வாரத்திற்குள் உங்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் ஒரு நேரத்தை முன்பதிவு செய்யலாம்; தேவையெனில் அருகிலுள்ள இடத்தை கண்டுபிடிக்க நான் உதவலாம்” போன்ற செயல்படுத்தக்கூடிய தெளிவான வழிகாட்டுதல்கள் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
சுயபரிசோதனை அடிப்படையிலான நடைமுறைகள் (reflective practice) மறைமுகமான பாகுபாடுகளை (implicit bias) குறைக்கவும் உதவக்கூடும். உதாரணமாக, “இதே மருத்துவ நிலை (clinical profile) கொண்ட மற்றொரு நோயாளிக்கும் இதே ஆலோசனையையோ அல்லது சிகிச்சை முடிவையோ ( tretement decision) வழங்கியிருப்போமா?” போன்ற எளிய சிந்தனைத் தூண்டல்கள் ( prompts), சிகிச்சை வழங்கலில் எதிர்பாராமல் ஏற்படும் வேறுபாடுகளை குறைக்க உதவலாம்.
முக்கியக் குறிப்புகள்
அதிக ஆபத்து கொண்ட COVID-19 நோயாளிகளை சிறப்பாக அடையாளம் காணுவதற்கு அவசியமாக பெரிய அளவிலான அமைப்பு மாற்றங்கள் தேவைப்படுவதில்லை. பல நேரங்களில், மருத்துவப் பணிச்சுற்று முறைகள் ( clinical workflows), பரிசோதனை நடைமுறைகள் ( screening procedures), மற்றும் தகவல் பரிமாற்ற முறைகளில் ( communication practices) செய்யப்படும் சிறிய மாற்றங்களே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
மருத்துவ வழிகாட்டுதல்களுடன் நடத்தை அறிவியல் சார்ந்த புரிதல்களையும் இணைப்பதன் மூலம், சுகாதாரப் பணியாளர்கள் அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு, அவர்களுக்கு தாமதமின்றி சிகிச்சை மதிப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். COVID-19 மற்றும் எதிர்கால தொற்றுநோய் பரவல்களின் சூழலில், மருத்துவ நடைமுறைகளில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சிறிய முன்னேற்றங்கள், கடுமையான நோய்களைத் தடுப்பதற்கும் உயிர்களை காப்பாற்றுவதற்கும் உதவக்கூடும்.
நடைமுறை பரிந்துரைகள்
- COVID-19 ஆலோசனைகளின் போது சுருக்கமான ஆபத்து மதிப்பீட்டு சரிபார்ப்பு பட்டியலை (brief risk-screening checklist பயன்படுத்துங்கள்)
COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அல்லது அறிகுறிகள் காணப்படும் ஒவ்வொரு நோயாளியுடனான (முன்) ஆலோசனையிலும் ( pre-consulation), வயது முதிர்வு, இதய மற்றும் இரத்த நாள நோய்கள், நீரிழிவு, அதிக உடல் எடை, நீண்டகால நுரையீரல் நோய்கள், புற்றுநோய், அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பொதுவான அதிக ஆபத்து காரணிகளை ( risk factors) விரைவாக மதிப்பிடுங்கள். குறிப்பாக பணிச்சுமை அதிகமான மருத்துவ சூழல்களில் ( busy clinical appointments), இது பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளை தவறவிடும் அபாயத்தை குறைக்க உதவலாம்.
- தனிப்பட்ட நோய்களை ( single conditions) விட மொத்த ஆபத்து நிலையை ( cumulative risk) கருத்தில் கொள்ளுங்கள்
பல நோயாளிகளுக்கு, ஒரே ஒரு தெளிவான அதிக ஆபத்து நிலை இல்லாமல், பல மிதமான ஆபத்து காரணிகள் ஒன்றாக இருக்கக்கூடும். ஆகையால், வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைக்கான தகுதியை மதிப்பிடும்போது ( antiviral treatement eligibility), ஒரே ஒரு நோயறிதலை மட்டும் கவனிப்பதற்குப் பதிலாக, வயது, இணைநோய்கள் (comorbidities), மற்றும் நோயாளியின் மொத்த மருத்துவ நிலை போன்ற முழுமையான ஆபத்து சுயவிவரத்தை( overall risk profile) கருத்தில் கொள்ளுங்கள்.
- சிகிச்சை வழங்க வேண்டிய காலவரம்பிற்குள் விரைவான மதிப்பீட்டை ( rapid assessment) முன்னுரிமைப்படுத்துங்கள்
COVID-19 க்கான ஆரம்பகட்ட சிகிச்சைகள், அறிகுறிகள் தொடங்கிய ( symptom onset) உடனேயே வழங்கப்படும்போது அதிக பயனளிக்கின்றன. எனவே, COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளை சிகிச்சைக்குத் தகுதியானவர்களா என்பதை விரைவாக மதிப்பிடும் தெளிவான பணிச்சுற்று முறைகளை (workflows) உருவாக்குங்கள். இதற்காக, அதே நாளில் மருத்துவ மதிப்பாய்வு ( same day clinical review), தனிப்பட்ட நோயாளர் முன்னுரிமை மதிப்பீட்டு நடைமுறைகள் ( triage pathways), அல்லது மின்னணு மருத்துவப் பதிவுகளில் தானியங்கி எச்சரிக்கை அமைப்புகள் (automated alerts within electronic health records) போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- நோயாளிகளுக்கு ஆபத்து குறித்து தெளிவாகவும் முன்கூட்டியேவும் விளக்குங்கள்
நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் உள்ள பல நோயாளிகள், தாங்கள் கடுமையான COVID-19 பாதிப்பிற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள் என்பதை அறியாமல் இருக்கலாம். குறிப்பிட்ட உடல்நல நிலைகள் எவ்வாறு ஆபத்தை அதிகரிக்கின்றன என்பதை விளக்கி, COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலோ அல்லது அறிகுறிகள் தோன்றினாலோ உடனடியாக சுகாதார சேவை வழங்குநர்களை தொடர்புகொள்ளுமாறு ஊக்குவிக்கவும்.
- சிகிச்சை முடிவுகளை ஒரே மாதிரியாக்குங்கள்
தனிப்பட்ட ஊகங்கள் மற்றும் அனுபவ அடிப்படையிலான உடனடி முடிவெடுப்புகளின் மீது சார்ந்திருப்பதை குறைப்பதற்காக, ஒழுங்குபடுத்தப்பட்ட முடிவெடுப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்ட நோயாளர் முன்னுரிமை மதிப்பீட்டு நடைமுறைகள் ( algorithmic triage pathways) மற்றும் மருத்துவ மதிப்பீட்டு மதிப்பெண் முறைகள் (clinical scoring systems) மூலம் சிகிச்சை முடிவுகளை ஒரே மாதிரியாக்க வேண்டும்.
ஒரு நோயாளிக்கு மேலதிக மதிப்பீடு அல்லது சிகிச்சை தேவையில்லை என்று முடிவு செய்வதற்கு முன், “இதே மருத்துவ நிலை கொண்ட மற்றொரு நோயாளிக்கும் இதே முடிவை எடுத்திருப்பேனா?” என்று சற்று சிந்தித்து பாருங்கள். இத்தகைய ஒழுங்குபடுத்தப்பட்ட சுயபரிசோதனை ( structured reflection), சிகிச்சை வழங்கலில் அறியாமலாக ஏற்படும் சமமின்மைகளை குறைத்து, முடிவுகள் ஊகங்களின் அடிப்படையில் அல்லாமல் உண்மையான மருத்துவத் தேவையின் அடிப்படையில் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த உதவும்.
மொழிபெயர்ப்பு: ரிஸ்மினா ரிழ்வான்