இ்ரெம் பெர்னா குவென்ச் எர்டோன், துருக்கி மத்திய கிழக்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்; இகா பலாச்-போபோர்சிக் SWPS பல்கலைக்கழகம், போலந்து; ஒல்கா பெர்ஸ்கி, ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்; ஷேசன் திவாரி, சைஃபோல்க்ஸ் எஜுகேஷன், இந்தியா; பெல்கின் உனால், மிச்சிகன் பல்கலைக்கழகம், அமெரிக்கா.
COVID-19 நோயின் வளர்ச்சிப்போக்கும் ஆரம்பகட்ட சிகிச்சையின் முக்கியத்துவமும்
பெரும்பாலானோர் COVID-19 தொற்றிலிருந்து தீவிர மருத்துவ சிகிச்சை தேவையின்றி குணமடைகிறார்கள். பொதுவாக ஆதரவளிக்கும் பராமரிப்பு மற்றும் அறிகுறிகளுக்கான சிகிச்சை ( symptomatic tretement) போதுமானதாக இருக்கும். இருப்பினும், மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் — குறிப்பாக முதியவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள், மற்றும் ஏற்கனவே நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் — கடுமையான நோய்ப்பாதிப்பிற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். இதனால், இத்தகைய அதிக ஆபத்து கொண்ட குழுக்களில் ஆரம்பத்திலேயே சிகிச்சை ( early tretement) வழங்குவதன் முக்கியத்துவத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) வலியுறுத்துகிறது. இது மருத்துவமனையில் அனுமதி ( hospitalization), தீவிர சிகிச்சைப் பிரிவு தேவைப்படுதல் ( intensive care), அல்லது மரணம் போன்ற கடுமையான விளைவுகளைத் தடுக்க உதவக்கூடும்.
சில நோயாளிகளுக்கு, கடுமையான நோய்ப்பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதற்காக வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை( antiviral tretement) பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை, அறிகுறிகள் தொடங்கிய முதல் ஐந்து நாட்களுக்குள் வழங்கப்படும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பரிசோதனை (testing), நோயறிதல் ( diagnosis), அல்லது சிகிச்சையில் ஏற்படும் தாமதங்கள், கிடைக்கக்கூடிய சிகிச்சைகளின் பயன்திறனை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கக்கூடும். எனவே, குறிப்பாக சமூக மட்ட சுகாதார சேவை அமைப்புகளில், நோயாளிகள் விரைவாக சிகிச்சையை அணுகக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவது, சிகிச்சையின் முழு பயனையும் பெறவும் நோயாளிகளின் உடல்நல முன்னேற்றத்தை மேம்படுத்தவும் மிகவும் முக்கியமானதாகும்.
மருத்துவமனையில் அனுமதி மற்றும் மரண அபாயத்தை குறைப்பதில் ஆரம்ப சிகிச்சையின் முக்கியத்துவத்தை காட்டும் ஆதாரங்கள்
ஆரம்பத்திலேயே வழங்கப்படும் சிகிச்சை ( early tretement), குறிப்பாக கடுமையான நோய்ப்பாதிப்பு ஏற்படும் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் மரணம் ஏற்படும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது. இந்த சிகிச்சையின் அவசரத்தன்மையை ( clinical urgency) சரியாகப் புரிந்துகொள்ள, கிடைக்கக்கூடிய ஆய்வுச் சான்றுகளை அவை உருவான மருத்துவ மற்றும் மக்கள்தொகைச் சூழலுடன் இணைத்து விளக்குவது அவசியமாகும்.
அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு பாரிய randomised clinical trial ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத, அதிக ஆபத்து கொண்ட, தடுப்பூசி பெறாத வயதானவர்களில், அறிகுறிகள் தொடங்கிய முதல் மூன்று நாட்களுக்குள் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை பெற்றவர்களுக்கு, placebo பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் சுமார் 89% குறைவாக இருந்தது.
அதேபோல், குறிப்பிட்ட வைரஸை இலக்காகக் கொண்ட antibody சிகிச்சையான Sotrovimab-ஐ ஆரம்பத்திலேயே வழங்குவதும், நோய் கடுமையடையும் அபாயத்தை 85% வரை குறைத்தது (இது ஆரம்பகட்ட வைரஸ் மாறுபாடுகள் ( early circulating variants) பரவிய காலத்தில் காணப்பட்டது; பின்னர் தோன்றிய மாறுபாடுகளுடன் அதன் பயன்திறன் மாறுபட்டது). இது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் கொண்ட அதிக ஆபத்து நோயாளிகளுக்கு, ஆரம்ப தலையீட்டின் ( early intervention) முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60% க்கும் மேற்பட்டோர் Hispanic மற்றும் Latinx சமூகங்களைச் சேர்ந்தவர்கள். COVID-19 தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட இந்த சமூகங்களில் கிடைத்த முடிவுகள், பல்வேறு சமூக மற்றும் மக்கள்தொகைச் சூழல்களிலும் ( socio-demographic context) ஆரம்ப சிகிச்சை பயனுள்ளதாக இருக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
அதேபோல், பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 18 நடைமுறை உலக (real-world) ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாய்வு (systematic review), ஆரம்பத்திலேயே வழங்கப்பட்ட சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் மரண அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்தது என்பதை கண்டறிந்தது. மேலும், அறிகுறிகள் தொடங்கிய முதல் ஐந்து நாட்களுக்குள் சிகிச்சை தொடங்கப்பட்டபோது அதன் பயன் அதிகமாக இருந்தது. ஹொங்கொங்கில் 87,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்த ஒரு பெரிய ஆய்வில், அறிகுறிகள் தோன்றிய முதல் 1–2 நாட்களுக்குள் சிகிச்சையை ஆரம்பித்தவர்களுக்கு, பின்னர் சிகிச்சை தொடங்கியவர்களுடன் ஒப்பிடும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் மரணம் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருந்தது.
மேலும், இந்தப் பயன் வயது, பாலினம், மற்றும் தடுப்பூசி நிலை உள்ளிட்ட பல்வேறு மக்கள்தொகை மற்றும் மருத்துவ துணைக் குழுக்களிலும் பொதுவாக ஒரே மாதிரியாகக் காணப்பட்டது.
இந்த அனைத்து ஆய்வுச் சான்றுகளையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது, ஒரு எளிய ஆனால் மிக முக்கியமான முடிவு தெளிவாகிறது: ஆரம்பத்திலேயே வழங்கப்படும் சிகிச்சை பயனுள்ளதாகும்; சிகிச்சையில் ஏற்படும் தாமதங்கள் அதன் பயன்திறனை குறைக்கின்றன.
உள்ளூர் மருத்துவ வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளின் மேலோட்டம்
சிகிச்சையை சரியான நேரத்தில் வழங்குவது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் நடைமுறையில் எந்த சிகிச்சைகள் கிடைக்கின்றன, மேலும் அவற்றை யார் பெற வேண்டும்?
மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத, லேசான அல்லது மிதமான COVID-19 தொற்று கொண்ட வயதானவர்களுக்கு, வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. தற்போது COVID-19 சிகிச்சையில் பொதுவாக பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன: Remdesivir, Nirmatrelvir/Ritonavir, மற்றும் Molnupiravir. எந்த சிகிச்சை மிகவும் பொருத்தமானது என்பது, ஒவ்வொரு நோயாளியின் ஆபத்து நிலை ( patient’s risk profile), அவர்கள் தற்போது பயன்படுத்தும் மருந்துகள், மருந்து வழங்கும் முறை, மற்றும் உள்ளூர் அளவில் அந்த மருந்துகள் கிடைப்பது ( local availability) போன்ற காரணிகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
Remdesivir என்பது மூன்று நாட்கள் தொடர்ந்து நரம்பு வழியாக (intravenous infusion) வழங்கப்படும் ஒரு வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையாகும். வாய்வழி மருந்து வழங்குவது (oral therapy) பொருத்தமற்ற சூழல்களில் இது முன்னுரிமை சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. சீரற்ற ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் ( randomized controlled trial) , வெளிநோயாளர் அடிப்படையில் (outpatient course) மூன்று நாட்கள் வழங்கப்பட்ட Remdesivir சிகிச்சை, placebo உடன் ஒப்பிடும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் மரணம் ஏற்படும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்தது. Remdesivir, ஆக்சிஜன் ஆதரவு தேவைப்படும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு immunomodulator மருந்துகளுடன் சேர்த்து பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், Nirmatrelvir/Ritonavir பயன்படுத்த இயலாத அதிக ஆபத்து கொண்ட வெளியுநோயாளிகளுக்கு, இது மாற்று இரண்டாம் நிலை சிகிச்சைத் தேர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது.
Nirmatrelvir/Ritonavir (Paxlovid) பொதுவாக ஐந்து நாட்களுக்கு வாய்வழியாக எடுத்துக்கொள்ளப்படும் ஒரு வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையாகும். இது, குறிப்பாக அதிக ஆபத்து கொண்ட மற்றும் தடுப்பூசி பெறாத நபர்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் மரணம் ஏற்படும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கக்கூடும் என்பது ஆய்வுகள் மூலம் காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO), மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளுக்கு, Nirmatrelvir/Ritonavir ஐ முதல் நிலை சிகிச்சையாக பரிந்துரைக்கிறது.
இறுதியாக, Molnupiravir என்பதும் வாய்வழியாக எடுத்துக்கொள்ளட்டும் ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும். மேலே குறிப்பிடப்பட்ட இரு சிகிச்சைகளையும் பெற முடியாத அல்லது அவற்றை சகித்துக்கொள்ள முடியாத நோயாளிகளுக்கு, இது மூன்றாம் நிலை சிகிச்சைத் தேர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. சீரற்ற ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், தடுப்பூசி பெறாத முதியவர்களிடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் மரணம் ஏற்படும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் பயன்கள் காணப்பட்டன. இருப்பினும், தடுப்பூசி பெற்ற மக்கள்குழுக்களில் கிடைத்த ஆதாரங்கள் ஒரே மாதிரியாக இல்லாததால், அதன் பயன்திறன் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
சிகிச்சை மருந்துகளின் கிடைப்புத்தன்மை ( availability of therapies), வெவ்வேறு சுகாதார அமைப்புகள் மற்றும் வளங்களின் நிலையைப் பொறுத்து மாறுபடக்கூடும். இருப்பினும், இந்த மூன்று மருந்துகளிலும் சிகிச்சை தொடங்கும் நேரம் மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் நோயின் ஆரம்ப கட்டத்தில் வழங்கப்படும் போது அவை அதிக பயனுள்ளதாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை, நோயறிதல், அல்லது மருந்து வழங்கும் முடிவில் ( prescribing decision) ஏற்படும் தாமதங்கள், சிகிச்சையால் கிடைக்கக்கூடிய நன்மைகளை நேரடியாகக் குறைக்கக்கூடும்.
சிகிச்சையை ஏற்க தயக்கம் காட்டுவதை சமாளிக்க நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும் முறைகள்
மருத்துவ ரீதியாக சிகிச்சையின் அவசியமும் அதன் நன்மைகளும் தெளிவாக இருந்தபோதிலும், ஏன் சில நோயாளிகளில் சிகிச்சையை ஏற்கும் தயக்கம் தொடர்ந்து காணப்படுகிறது?
சிகிச்சை தொடர்பான முடிவெடுப்பில் தாமதம் ஏற்படுவதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. பொதுவாகக் காணப்படும் ஒரு தடையாக “காத்திருந்து பார்ப்போம் ( watch & wait) ” என்ற அணுகுமுறை உள்ளது. இதில், நோயாளிகள் COVID-19 இன் கடுமையை குறைத்து மதிப்பிட்டு, சிகிச்சையை தாமதப்படுத்தக்கூடும். மேலும், பக்கவிளைவுகள் மற்றும் மருந்துகளுக்கிடையேயான தொடர்புகள் ( potential drug interactions) பற்றிய கவலைகளும் அடிக்கடி காணப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு மருந்துகளை ஏற்கனவே பயன்படுத்தி வரும் நோயாளிகளில், இத்தகைய அச்சங்கள் அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும், சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு குறைவு மற்றும் தெளிவான தகவல்களைப் பெறுவதிலான சிரமங்களும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்தக்கூடும். ஆய்வுகள் தெரிவிப்பதாவது, நோயறிதலுக்கு முன்பு Paxlovid (Nirmatrelvir/Ritonavir) போன்ற சிகிச்சைகள் குறித்து சுமார் 54% வயதானவர்கள் மட்டுமே கேள்விப்பட்டிருந்தனர்.இந்த அனைத்து காரணிகளும் ஒன்றிணைந்து நிச்சயமின்மையை உருவாக்கி, நோயாளிகள் சிகிச்சையை ஏற்க தயங்கவோ அல்லது அதை தாமதப்படுத்தவோ வழிவகுக்கின்றன.
நடைமுறையில் வேறுபட்ட முறையில் என்ன செய்யலாம்?
முதலில், COVID-19 சிகிச்சைகள் வெறும் அறிகுறிகளை குறைக்கும் சிகிச்சைகள் மட்டுமல்ல; அவை சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டிய தடுப்பு நோக்கமுடைய தலையீடுகள் ( time sensitive preventive interventions) என்பதைக் வலியுறுத்துங்கள். வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (antivirals), சாதாரண சிகிச்சையாக மட்டும் அல்லாமல், கடுமையான நோய்ப்பாதிப்பைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை முறையாக விளக்குங்கள். இதன் மூலம், ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது கடுமையான நோய் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் போன்ற அபாயங்களை குறைக்க உதவுகிறது என்பதை நோயாளிகள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இரண்டாவது, நம்பிக்கைக்குரிய ஒரு மருத்துவரிடமிருந்து வழங்கப்படும் நேரடி பரிந்துரை மிகவும் முக்கியமானது. குறிப்பாக, நோயாளிகள் நன்கு அறிந்த மற்றும் நம்பிக்கை கொண்ட மருத்துவர் ஒருவர் சிகிச்சையை தெளிவாக பரிந்துரைத்து, அதன் பாதுகாப்பு மற்றும் அவர்கள் தற்போது பயன்படுத்தும் மருந்துகளுடன் பொருந்தக்கூடிய தன்மை குறித்து உறுதியளிக்கும் போது, அவர்கள் சிகிச்சையை ஏற்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆய்வுத் தரவுகள் காட்டுவதாவது, தமது மருத்துவர் நேரடியாக பரிந்துரைக்கும் போது வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள தயாராக இருக்கும் நபர்களின் விகிதம் 20% க்கும் அதிகமாக உயர்கிறது. குறிப்பாக, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களிடம் இந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் அளவு 93% வரை பதிவாகியுள்ளது.
இறுதியாக, முன்கூட்டிய அணுகுமுறையும் (proactive outreach) ஒரே மாதிரியாக அமைக்கப்பட்ட நோயாளர் கல்வியும் ( standardized education) மிகவும் அவசியமானவை. நோயாளிகள் தாங்களாகவே சிகிச்சையை கேட்டு பெற்றுக் கொள்வது அரிதாகவே நடைபெறுகிறது. ஆய்வுகள் காட்டுவதாவது, சிகிச்சைக்கு தகுதியான நோயாளிகளில் 20% க்கும் குறைவானவர்களே போதுமான தகவலறிவுடன், யாரும் நினைவூட்டாமல் சிகிச்சையை கோரும் முன்முயற்சியைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சுகாதாரக் குழுக்கள் நோயறிதலுக்குப் பிறகு தகுதியான நோயாளிகளை விரைவாக தொடர்புகொண்டு, சிகிச்சையின் நன்மைகள், அபாயங்கள், மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்த சுருக்கமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும்.
முக்கிய குறிப்புகள்
அறிகுறிகள் தொடங்கிய முதல் ஐந்து நாட்களுக்குள் COVID-19 க்கான சிகிச்சையை ஆரம்பிப்பது, குறிப்பாக அதிக ஆபத்து கொண்ட நபர்களுக்கு மிகவும் அவசியமானதாகும். ஆரம்பகட்ட சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் மரணம் ஏற்படும் அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கக்கூடும் என்பதை மருத்துவ ஆய்வுகளும் நடைமுறை உலக ஆதாரங்களும் வலுவாக உறுதிப்படுத்துகின்றன.
Nirmatrelvir/Ritonavir, Remdesivir, மற்றும் Molnupiravir போன்ற வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள், ஆரம்பத்திலேயே வழங்கப்படும் போது அதிக பயன் அளிக்கின்றன. எந்த சிகிச்சை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது நோயாளியின் உடல்நிலை அம்சங்கள் மற்றும் சிகிச்சை கிடைப்புத்தன்மை போன்ற அம்சங்களைப் பொறுத்தது. தெளிவான நன்மைகள் இருந்தபோதிலும், விழிப்புணர்வு குறைவு மற்றும் தயக்கம் காரணமாக சிகிச்சை தாமதங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. சரியான நேரத்தில் சுகாதார வழங்குநர்களின் பரிந்துரைகள், முன்கூட்டிய அணுகல் நடவடிக்கைகள், மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை தடுப்புச் சிகிச்சையாக விளக்குவது ஆகியவை, சிகிச்சை ஏற்றுக்கொள்ளுதலையும் ஆரோக்கிய விளைவுகளையும் மேம்படுத்த முக்கியமானவை ஆகும்.
நடைமுறை பரிந்துரைகள்
- ஆரம்பகட்ட தலையீட்டிற்கு முன்னுரிமை அளிக்கவும்
வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள், அறிகுறிகள் தொடங்கிய முதல் ஐந்து நாட்களுக்குள் வழங்கப்படும் போது அதிக பயன் அளிக்கின்றன. நோயாளியின் உடல்நிலை மேலும் மோசமடையும் வரை காத்திருக்க வேண்டாம்.
அதிக ஆபத்து கொண்ட நோயாளிகளிடம் வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய COVID-19 பரிசோதனை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். மேலும், பரிசோதனை முடிவு நேர்மறையாக (positive) வந்த முதல் நாளிலேயே சிகிச்சையை தொடங்குவதற்காக உடனடியாக சுகாதார சேவையுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.
- அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்.
நீரிழிவு, இதய நோய், நீண்டகால சிறுநீரக நோய் அல்லது BMI 30-க்கு மேல் உள்ள பெரியவர்களில் கவனம் செலுத்துங்கள். இவர்கள் ஆரம்பத்தில் பெரும்பாலும் “நன்றாக இருக்கிறோம்” என்று உணரலாம், ஆனால் திடீர் நிலைமைக் குறைவு ( sudden decline) ஏற்படும் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் இவர்கள். ஆரம்ப சிகிச்சை என்பது மருத்துவமனை அனுமதியைத் தவிர்க்க அவர்களுக்கு கிடைக்கும் சிறந்த பாதுகாப்பாகும்.
- ஆரம்பத்திலேயே கண்டறிந்து பரிசோதனை செய்யுங்கள் ( screen early).
அதிக ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காண உங்கள் நோயாளர் பட்டியல்களை முன்கூட்டியே பரிசோதித்து, அறிகுறிகள் தோன்றும் உடனேயே விரைவான நோயறிதலுக்கான தெளிவான “fast-track” நடைமுறையை ( protocol) அமைக்கவும். சரியான நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், மருத்துவ நிலை மோசமடைவதைத் ( clinical detorioration) தடுக்கும் அடிப்படை அம்சமாகும்.
- தடுப்புச் சிகிச்சையாக புரியவையுங்கள் ( refarame as prevention).
ஒரு நோயாளர் இன்று நன்றாக இருக்கிறார் என்றால், மருந்து அவசியமில்லை என்று அவர் நினைக்கலாம். ஆனால் சிகிச்சையின் நோக்கம் வெறும் இருமலை குணப்படுத்துவது மட்டும் அல்ல; அடுத்த வாரம் மருத்துவமனையில் சேர வேண்டிய நிலையைத் தடுப்பதே என்பதை விளக்குங்கள். அவர்களை வீட்டில் தங்களது படுக்கையில் வைத்திருக்க முடிவது ஒரு வலுவான ஊக்கமாக இருக்கும்.
- மருந்து பரிந்துரைப்பதில் ( prescribing) ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும்.
தற்போதைய மருந்துகள், எதிர்விளைவுகள் (contraindications) மற்றும் சிகிச்சைக்கான தகுதி ஆகியவற்றை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பரிசீலனை செய்யவும். எளிய மருந்து பரிந்துரை வழிமுறைகளும், விரைவான மருந்து சரிபார்ப்பும் (medication reconciliation) அதிக ஆபத்துள்ள நோயாளிகள் தங்களின் முக்கியமான ஆரம்பக்கட்ட சிகிச்சை நேரத்திற்குள் வைரஸ் எதிர்ப்புச் (antiviral) சிகிச்சையைத் தொடங்க உதவும்.
மொழிபெயர்ப்பு: ரிஸ்மினா ரிழ்வான்