Practical Health Psychology

Translating research to practice, one blog post at a time

Practical Health Psychology
COVID-19 ஐத் தாண்டிய வாழ்க்கை: நீண்டகால உடல்நல பாதிப்புகளை நிர்வகித்தல்

COVID-19 ஐத் தாண்டிய வாழ்க்கை: நீண்டகால உடல்நல பாதிப்புகளை நிர்வகித்தல்

பங்களிப்பாளர்கள்: டொமினிகா க்வாஸ்னிக்கா, மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா மற்றும் ரிஸ்மினா ரிழ்வான்,  சுயாதீன ஆய்வாளர், இலங்கை 

COVID-19 இன் தீவிர பாதிப்புக்குப் பின்: நாம் இன்னும் கற்றுக்கொண்டுவரும் அம்சங்கள்

COVID-19 இன் தீவிர (acute) கட்டமே உலகளாவிய கவனத்தின் மையமாக இருந்தபோதிலும், அதன் நீண்டகால விளைவுகள் தற்போது மருத்துவ நடைமுறைகளில் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் (WHO), SARSCoV2 தொற்றுக்குப் பிறகு postCOVID19 நிலைகள் உருவாக அதிக ஆபத்தில் உள்ள சில மக்கள் குழுக்களை  ( higher risk populations) அடையாளம் காட்டியுள்ளது. இதில் பெண்கள், முதியவர்கள், புகைபிடிப்பவர்கள், அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்கள், முன்பிருந்த நீண்டகால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் (pre-existing chronic health conditions), மற்றும் உடல் அல்லது செயல்திறன் குறைபாடுகளுடன் வாழும் நபர்கள் ( people with disabilities).

பலர் தொற்று ஏற்பட்ட பின்னரும் வாரங்கள் அல்லது மாதங்கள் கடந்தும் அறிகுறிகளை ( symptoms) அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள்; அதேவேளை, சிலருக்கு புதிய நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் (chronic conditions) உருவாகவோ அல்லது ஏற்கனவே உள்ள நோய்கள் மேலும் மோசமடையவோ செய்கின்றன.குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஏற்கனவே நீண்டகால நோய்களின் ஆபத்தில் உள்ளவர்களுக்கு, நோயாளிமையப்படுத்தப்பட்ட (patientcentred) பயனுள்ள சிகிச்சையை வழங்க, இந்த நீண்டகால விளைவுகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். சுகாதாரப் பணியாளர்களுக்கு, இது தீவிரகட்ட சிகிச்சை மேலாண்மையைத் தாண்டி ( acute management), தொடர்ச்சியான கண்காணிப்பு ( on going monitoring), தடுப்பு நடவடிக்கைகள் ( prevention), மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சைத் திட்டமிடல் ( coordinated care planning) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையை உருவாக்குகிறது.

Long COVID என்றால் என்ன? அதன் சிக்கலான மற்றும் தொடர்ந்து மாற்றமடைந்து வரும் ஒரு நிலையைப் புரிந்துகொள்ளல்

Long COVID அல்லது post-COVID-19 நிலை என்பது, ஆரம்ப SARS-CoV-2 தொற்று ஏற்பட்ட மூன்று மாதங்கள் கழித்தும் அறிகுறிகள் தொடர்ந்து காணப்படுதல் அல்லது புதிய அறிகுறிகள் உருவாகுதல் என வரையறுக்கப்படுகிறது. இவ்வறிகுறிகள் குறைந்தது இரண்டு மாதங்களாவது நீடிக்க வேண்டும்; மேலும் அவற்றிற்கு வேறு மருத்துவ காரணம் இருக்கக்கூடாது. (இது உலக சுகாதார நிறுவனம் (WHO) வழங்கிய வரையறையாகும்; இருப்பினும், வெவ்வேறு அமைப்புகளில் இந்த வரையறையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.)

பொதுவான அறிகுறிகளில் சோர்வு ( fatigue), மூச்சு விடுவதில் சிரமம்,  சிந்தனை மற்றும் நினைவாற்றல் சிரமங்கள் (brain fog), மார்பு வலி, மற்றும் தூக்கக் குறைபாடுகள் அடங்கும். இந்த அறிகுறிகள் மாறிமாறி தோன்றக்கூடும் மற்றும் உடலின் பல உறுப்புகளை பாதிக்கக்கூடும். அறிகுறிகள் பெரும்பாலும் குறிப்பற்றதாக (non-specific) இருப்பதால், மருத்துவர்கள் உடலின் பல அமைப்புகளையும் கருத்தில் கொண்ட விரிவான மதிப்பீட்டை ( broad systems based-assessment) மேற்கொள்ள வேண்டும்.

Long COVIDஇன் பாதிப்பு அளவு மதிப்பீடுகள் (prevalance estimates) மாறுபட்டாலும், இது முதியவர்கள், முன்பிருந்த உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், மற்றும் ஆரம்பத்தில் கடுமையான நோய்ப்பாதிப்பை அனுபவித்தவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.  இருப்பினும், லேசான அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாத தொற்று ஏற்பட்டவர்களையும் இது பாதிக்கக்கூடும். இதனால், Long COVID ஒரு பரவலாகப் பாதிக்கக்கூடிய மற்றும் முன்கூட்டியே கணிக்க முடியாத ஒரு நிலையாக மாறுகிறது.

COVID-19 எவ்வாறு நீண்டகால நோய்களின் ஆபத்தை ( (chronic disease risk) மாற்றி அமைக்கிறது

புதிய ஆய்வுச் சான்றுகள், COVID-19 நீண்டகால நோய்கள் உருவாகுவதற்கும் அல்லது ஏற்கனவே உள்ள நோய்கள் மோசமடைவதற்கும் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதை காட்டுகின்றன. உதாரணமாக, சில நோயாளிகளுக்கு COVID-19 தொற்றிற்குப் பிறகு புதிதாக நீரிழிவு நோய்( new-onset diabetes) உருவாகக்கூடும். இது வைரஸ் கணையத்தின் செயல்பாட்டில் ஏற்படுத்தும் பாதிப்பு அல்லது அழற்சியால் ( inflammation) உடலின் மாற்றுச் செயல்முறைகளில் (metabolic changes) ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். அதேபோல், இதய தசை சேதம் (myocardial injury) , இதய துடிப்பு கோளாறுகள் (arrhythmias) , மற்றும் இதய செயலிழப்பு அபாயம் அதிகரித்தல் ( increased risk of heart failure) போன்ற இதய-இரத்த நாள சிக்கல்களும் ( cardiovascular complications), தீவிர நோயிலிருந்து மீண்ட பிறகும் காணப்பட்டுள்ளன. எனவே, இதயம் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான ஆபத்து காரணிகளை ( cardiometabolic risk factors) தொடர்ந்து கண்காணிப்பது post-COVID சிகிச்சையின் முக்கிய அங்கமாகும்.

இந்த தொடர்புகள், COVID-19 ஐ வெறும் தீவிர சுவாசத் தொற்றாக மட்டுமல்லாமல், உடலின் பல அமைப்புகளையும் நீண்டகாலமாக பாதிக்கக்கூடிய ஒரு நிலையாக பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஏற்கனவே நீண்டகால நோய்களுடன் வாழும் நோயாளிகளுக்கு, COVID-19 நோயின் முன்னேற்றத்தை வேகப்படுத்தவோ அல்லது நோய் மேலாண்மையை மேலும் சிக்கலாக்கவோ முடியும்.

COVID-19 க்கு பின் முதியவர்கள்: COVID-19 க்கு பின் முதியவர்கள்: குணமடைவு, உடல்நலச் சரிவு, மற்றும் மீளெழும் திறனை வலுப்படுத்தி முன்னேறுதல்

COVID-19 இன் தீவிர மற்றும் நீண்டகால விளைவுகளால் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, இளையவர்களுடன் ஒப்பிடும்போது Long COVID-19 தொடர்பான அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், COVID-19 இதயஇரத்த நாள நோய்கள் (cardiovascular disorders), சுவாச நோய்கள் (respiratory diseases) , மற்றும் நரம்பியல் சிதைவு நோய்கள் (neurodegenerative disorders) போன்ற ஏற்கனவே உள்ள நீண்டகால நோய்களைத் தூண்டவோ அல்லது மோசமடையச் செய்யவோ முடியும்.

மருத்துவ சிக்கல்களைத் தாண்டி, பலர் செயல்திறன் குறைவை ( functional decline) அனுபவிக்கிறார்கள். இதில் இயக்கத் திறன் குறைவு (reduced mobility), தசை பலவீனம் (muscle weakness) , மற்றும் தன்னிச்சையான வாழ்வுத் திறன் இழப்பு ( loss of independence) அடங்கும். நோயின்போது மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட சமூகத் தனிமைப்பாடு ( social isolation), மனஅழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனநலச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கக்கூடும். வாழ்க்கைத் தரமும் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படலாம். வெளிப்படையாக குணமடைந்தபோதிலும், பல முதிய நோயாளிகள் தங்களின் முந்தைய செயல்திறன் நிலைக்கு திரும்புவதில் சவால்களை எதிர்நோக்கக்கூடும்; இதனால் சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், மற்றும் சமூக சேவைகளின் கூடுதல் ஆதரவு தேவைப்படலாம். இந்த மக்கள்குழுவில் செயல்திறன் நிலை ( functional status), மனநிலை ( mental helath), மற்றும் சமூக ஆதரவை ( social support) வழக்கமாக மதிப்பிடுவது  ( routine assessment) மிகவும் முக்கியம்.

ஏன் Long COVID க்கு குழு அடிப்படையிலான நீண்டகால சிகிச்சை அணுகுமுறை (team-based, long-term care approach ) தேவைப்படுகிறது?

COVID-19 க்கு பிந்தைய பல்வேறு பாதிப்புகளை கருத்தில் கொள்ளும்போது, பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறை (multidisciplinary approach) மிகவும் அவசியம். இதில் பொது மருத்துவர்கள் (general practitioners), நிபுணர்கள் (இதய நிபுணர்கள்-cardiologists அல்லது உட்சுரப்பியல் நிபுணர்கள்-endocrinologists, உடற்பயிற்சி சிகிச்சையாளர் ( physiotherapists), உளவியல் நிபுணர்கள் ( psychologists), மற்றும் சமூகப் பணியாளர்கள் ( social workers) ஆகியோரின் பங்களிப்பு அடங்கலாம். தொடர்ச்சியான பின்தொடர்பு (Regular follow-up) , புதிய அல்லது மோசமடையும் நிலைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் தலையீடு செய்ய உதவுகிறது. சேவைகளுக்கிடையில் தெளிவான பரிந்துரை நடைமுறைகள் (clear referral pathways) மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை (clear communication channels) உருவாக்குவது சிகிச்சையின் தொடர்ச்சியை மேம்படுத்தும்.

மிக முக்கியமாக, சிகிச்சை ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட வேண்டும். Long COVID கொண்ட நோயாளிகள் பல்வேறு (diverse symptoms) மற்றும் ஒன்றோடொன்று இணையும் அறிகுறிகளுடன் ( overlapping symptoms) வரக்கூடும்; மேலும் அவர்களின் குணமடைவு பாதைகள் மிகவும் மாறுபடக்கூடும். ஏற்கனவே உள்ள நீண்டகால நோய் மேலாண்மைத் திட்டங்களில் ( chronic disease management) Long COVID தொடர்பான அம்சங்களை இணைப்பது சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தி, கூடுதல் சிக்கல்களின் அபாயத்தை குறைக்க உதவும். பகிரப்பட்ட முடிவெடுப்பு ( shared decision making) மற்றும் இலக்கு நிர்ணயம் ( goal setting), நோயாளியின் முன்னுரிமைகள் மற்றும் திறன்களுடன் சிகிச்சையை ஒத்திசைக்க உதவும். 

முன்னோக்கி நகர்தல்: விழிப்புணர்வு, நம்பிக்கை, மற்றும் தொடர்ச்சியை கட்டியெழுப்புதல்

COVID-19 இன் நீண்டகால விளைவுகளை அடையாளம் காண்பதிலும், அவற்றை கையாளுவதிலும் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நோயாளிகளிடையே விழிப்புணர்வை அதிகரித்தல், அவர்களின் அறிகுறிகளை அங்கீகரித்தல், மற்றும் தெளிவான வழிகாட்டுதலை வழங்குதல் ஆகியவை குழப்பத்தை குறைத்து சிகிச்சையில் ஈடுபாட்டை மேம்படுத்த உதவும். நோயாளிகளுடன் Long COVID பற்றி நம்பிக்கையுடன் பேசும் திறனை வளர்த்துக்கொள்வது மருத்துவ நடைமுறையின் முக்கிய கூறாகும்.

ஆராய்ச்சிகள் தொடர்ந்து புதிய தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அறிந்து கொண்டு மாற்றங்களுக்கு தகுந்தவாறு செயல்படுவது அவசியம். COVID-19 இன் நீண்டகால சுமை எதிர்கால ஆண்டுகளிலும் தொடரக்கூடும்; இதனால் அது நீண்டகால நோய் மேலாண்மையின் முக்கிய பகுதியாக இருக்கும். தொடர்ச்சியான தொழில்முறை கல்வி (இந்த பயிற்சி உட்பட) மற்றும் புதிய ஆய்வுச் சான்றுகளை நடைமுறையில் இணைத்துப் பயன்படுத்துதல், நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சை விளைவுகளை உறுதிப்படுத்த மிகவும் அவசியமாகும்.

நடைமுறை பரிந்துரைகள்

1. நீடித்த அறிகுறிகள் குறித்து முன்கூட்டியே கேளுங்கள்

வழக்கமான ஆலோசனைகளின் போது, ஆரம்ப COVID-19 தொற்று லேசாக இருந்தாலும் கூட, நோயாளிகளிடம் தொடர்ச்சியாக உள்ள அறிகுறிகள் குறித்து கேளுங்கள். சோர்வு (fatigue), சுவாசிப்பதில் சிரமம் (breathlessness), மற்றும் சிந்தனைத் திறன் மாற்றங்கள்  (cognitive changes) போன்றவை பெரும்பாலும் தெரிவிக்கப்படாமல் போகின்றன. குறிக்கோள் கொண்ட கேள்விகள் (targeted questions), ஆரம்ப அடையாளங்காணல் ( early recognition), சரியான நேர மதிப்பீடு (timely assessment), மற்றும் தேவையான இடங்களில் பரிந்துரை செய்ய உதவும்.

  1. புதியதாக உருவாகும் அல்லது மோசமடையும் நீண்டகால நோய்களை பரிசோதியுங்கள்

புதியதாக உருவாகும் நீரிழிவு (new onset diabetes), இதயஇரத்த நாள சிக்கல்கள் (cardiovascular complications), அல்லது ஏற்கனவே உள்ள நோய்களின் மோசமடைதல் போன்ற அறிகுறிகளை கண்காணியுங்கள். இதில் இரத்த சர்க்கரை அளவுகள், இரத்த அழுத்தம், மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய எச்சரிக்கை அறிகுறிகளை பரிசோதிப்பதும் அடங்கலாம். இந்த பரிசோதனைகளை postCOVID பின்தொடர்பு சிகிச்சைகளில் (follow-up) ஒருங்கிணைப்பது, சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்.

3. முதியவர்களின் செயல்திறன் மீட்சியை (functional recovery) ஊக்குவியுங்கள்

நோயாளியின் உடல் திறனை கருத்தில் கொண்டு, படிப்படியாக உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்க செயற்பாடுகளில் மீண்டும் ஈடுபட ஊக்குவிக்கவும். சில நோயாளிகளில் அதிக உழைப்பிற்குப் பிறகு அறிகுறிகள் தீவிரமடை யக்கூடும் என்பதால், புனர்வாழ்வு (rehabilitation) மற்றும் செயல்பாட்டு திட்டமிடல் (activity planning) தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட வேண்டும். உடற்பயிற்சி சிகிச்சை (physiotherapy) அல்லது புனர்வாழ்வு சேவைகளுக்கான (rehabilitation services) பரிந்துரை, இயக்கத் திறன், உடல் வலிமை, மற்றும் தன்னிச்சையான வாழ்வுத் திறனை மேம்படுத்த உதவும். குறிப்பாக நீண்டகால சமூக தனிமையை (prolonged social isolation) அனுபவித்த நோயாளிகளில், சிந்தனைத் திறன் மற்றும் மனநல மதிப்பீடுகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.

4. பல்துறை ஒருங்கிணைந்த அணுகுமுறையை (multidisciplinary approach) பின்பற்றுங்கள்

சாத்தியமான இடங்களில் பல துறைகளுக்கிடையில் சிகிச்சையை ஒருங்கிணையுங்கள். சிக்கலான அல்லது நீடித்த அறிகுறிகள் உள்ள நோயாளிகள், மருத்துவம், துணை சுகாதார சேவைகள், மற்றும் உளசமூக ஆதரவு சேவைகளின் இணைந்த பங்களிப்பால் பயனடையக்கூடும். சிகிச்சை வழங்குநர்களுக்கிடையேயான தெளிவான தகவல் பரிமாற்றம், துண்டிக்கப்பட்ட அல்லது ஒழுங்கற்ற சிகிச்சையைத் ( fragmented care) தவிர்க்க மிகவும் முக்கியமானதாகும்.

5. நம்பிக்கையளித்து, யதார்த்தமான எதிர்பார்ப்புகளை உருவாக்குங்கள்

Long COVID இலிருந்து குணமடைவு மெதுவாகவும் மாறுபட்டதாகவும் இருக்கலாம். நோயாளிகளின் கவலைகளை அங்கீகரித்து, அவர்களின் அனுபவங்களை மதித்து, எதிர்பார்க்கக்கூடிய நிலைகள் குறித்து தெளிவான தகவல்களை வழங்குங்கள். சுயமேலாண்மை முறைகளை (self-management strategies) மற்றும் தொடர் சிகிச்சைக்களை (follow-up) ஆதரிப்பதும், நோயாளிகள் தங்களின் குணமடைவு செயல்முறையில் அதிக கட்டுப்பாட்டை உணர உதவும்.

மொழிபெயர்ப்பு: ரிஸ்மினா ரிழ்வான்

Practical Health Psychology

Translating research to practice, one blog post at a time

Subscribe

Sign up today to get notified whenever a new blog post is published!

And don’t worry, we hate spam too! You can unsubscribe at anytime.